தாவீதின் ஜெபம்
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் நான்காம் அதிகாரம் முதலாவது வசனத்திலே, என் நீதியின் தேவனே! நான் கூப்பிடுகையில் எமக்கு செவிக்கொடும். நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தை கேட்டருளும்.
என் நீதியின் தேவனே! நான் கூப்பிடுகையில் எனக்கு செவிகொடும். இது தாவீதுனுடைய ஒரு மனதுருக்கமான ஜெபம். நான் உம்மிடத்திலே ஜெபிக்கிறபொழுது எம்முடைய மனதின் பாரங்களை உம்முடைய சமூகத்திலே சொல்ல முற்படுகிறபொழுது நீர் எமக்கு செவி கொடுப்பீராக. எம்முடைய ஜெபத்தை கேட்டு உதவி செய்வீராக. நெருக்கத்திலே இருக்கிற எமக்கு எத்தனையோ சமயங்களில் விசாலமுண்டாக்கினீர். என் கால்களை உறுதிப்படுத்தி இருக்கிறீர். தடுமாறதபடி, விழுந்துவிடாதபடி நீர் என்னை தாங்கி இருக்கிறீர். நீர் ஜெபத்தை கேட்கிறவர்.
சகல உதவிகளை அருளிச்செய்கிற தேவன். இவ்விதமாக எமக்கு உதவி செய்வீராக. எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தை கேட்டருளும். எனக்கு இரங்கும். எனக்கு கிருபைக்கொடும். எம்முடைய ஜெபத்திற்கு ஆண்டவரே உம்முடைய செவிகளை திறந்தருளி இருப்பதாக என்று விண்ணப்பிக்கின்றார். இவ்விதமான ஒரு பாரமுள்ள ஜெபம் நமக்கு ஒரு ஆறுதலை கொடுக்கும். சமாதானத்தை தாரும்.
கர்த்தர் நம்மை கேட்கிறவர். நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறவர். அவர் தம்முடைய காதுகளை அடைத்து கொள்கிற தேவனல்ல. அவர் மனதுருக்கம் உள்ள ஆண்டவர். அவரை நோக்கி கூப்பிடுகிற எந்தவொரு சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்யவல்லவராக இருக்கிறார். திகையாதே! கலங்காதே! நான் உன் தேவன். நான் உன்னோடுகூட இருக்கிறேன் என்று வாக்குக்கொடுத்த கர்த்தர் சகல ஆறுதலையும் தேறுதலையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் ஏற்ற வழிகளிலே கொடுத்து ஆசிர்வதிப்பார். கர்த்தரே நம்மை தேற்றுவார். அவருடைய திருக்கரமே நமக்கு ஆறுதலாக இருக்கும்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். உம்முடைய கிருபையை எங்களுக்கு தாரும். நீர் எங்களுக்கு கேடகமாக இருப்பீராக. எங்களுக்கு செவி கொப்பீராக. நெருக்கத்திலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் பாடுகளிலிருந்தும் கண்ணீர்களிலிருந்தும் விடுதலை கொடுத்து எங்களை தேற்றுவீராக. நீர் இரட்சித்து கொள்வீராக. உம்முடைய தயையுள்ள கரம் எங்களோடு கூட இருப்பதாக. இந்த ஜெபத்தை தியானித்து கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளின் வாழ்க்கையிலும் நீர் அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்