தமிழகத்தில் 50% பெண் அமைச்சரவை அமைக்க நாம் தமிழர் கட்சி முயற்சி!

இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, திரைப்பட இயக்குனரான சீமான், வரவிருக்கும் லோக் சபா தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கி உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களுக்கு பெண்களை வேட்பாளர்களாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இளநிலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களை வேட்பாளர்களாக திரு. சீமான் தேர்ந்தெடுத்துள்ளார். தமிழகம் மற்றும் இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள் பற்றி சீமான் குரல் கொடுத்து வருவது இளைஞர்களின் மத்தியில் இணையத்தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர், பொது மக்கள் எளிதாக அணுகக்கூடிய அரசியல்வாதியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆளும் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது, இதில் பெண்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக ஏழு மற்றும் நான்கு இடங்களில் போட்டியிடுகின்றன, இவற்றில் அனைத்து தொகுதிகளிலும் ஆண்கள் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில், அக்கட்சி இரண்டு பெண்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. டி.டி.வி.தினகரன் அமமுக சார்பாக மூன்று பெண்களை தேர்ந்தெடுத்துள்ளார். நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மையம் சார்பாக வருகிற தேர்தலில் போட்டியிட இரண்டு பெண்களை தேர்ந்தெடுத்துள்ளார்.

2016ம் ஆண்டில் நடந்த தேர்தலில், மொத்தம் 4.25 லட்சம் வாக்குகளை (~ 1%) நாம் தமிழர் கட்சி பெற்றது. இந்த தேர்தலில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகர்ப்புற மையங்களில் இருந்து பெரும்பான்மை வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தன. கடந்த தேர்தல்களில் தேமுதிக மற்றும் பாமக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கருதப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகத்தில் ஓட்டு சதவிகிதம் குறைவாக இருந்தது நினைவிருக்கலாம். ஆனால் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக மற்றும் பாமக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015ம் ஆண்டில் நடந்த பொது தேர்தலின் போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தனது 50% பெண் அமைச்சரவைக்கான விளக்கத்தை அளிக்கும் போது ‘ஏனெனில் இது 2015’ என கூறியது சர்வதேச கவனத்தை ஈர்த்தது நினைவிருக்கலாம். இவ்வித சமத்துவ நிலை நோக்கி இந்தியாவில் முதன் முறையாக 50 சதவிகித பெண் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தேர்வு செய்தது நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் இவ்வித சமத்துவ நிலை ஏற்பட சட்ட திருத்தங்கள் மூலம் நிரந்திர தீர்வு பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com