சிலுவையின் வார்த்தை 06:01 | முடிந்தது.
யோவான் 19:30 இயேசு காடியை வாங்கின பின்பு முடிந்தது என்று சொல்லி…
இயேசு சிலுவையில் சொன்ன ஆறாவது வார்த்தை முடிந்தது. பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவை தம்முடைய சித்தத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்காக இந்தப் பூமிக்கு அனுப்பினார்.
யேசுவாகிய ஆண்டவர் முப்பதாவது வயதில் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் பிதாவாகிய தேவன் தனக்குக் கொடுத்த ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். மூன்றரை ஆண்டு காலத்திற்குள் தன் ஊழியப் பணிகள் எல்லாவற்றையும் அதைச் சிலுவையில் நிறைவாகச் செய்து முடித்தார். இனி செய்ய வேண்டியது ஒன்றுமில்லை என்பதினால் முடிந்தது என்று கூறுகிறார். இயேசு செய்து முடித்தவைகளைக் கீழே காண்போம்.
1. பிசாசின் தலையை நசுக்கி முடித்தார்
ஆதி.3:15 உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.
எபிரேயர் 2:14 ஆதலால் பிள்ளைகள் ரத்தத்தையும் மாம்சத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் ரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் வ.15 ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினால் அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.
ஏதேன் தோட்டத்திலே சத்துருவாகிய பிசாசு ஏவாளை வஞ்சித்து பாவம் செய்யத் தூண்டினான். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து தேவ சாயலை இழந்தார்கள். நித்திய ஜீவனை இழந்தார்கள். பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைப் பெற்றார்கள். இச்செயல் மனுகுலத்தைப் படைத்த பிதாவாகிய தேவனுக்குப் பெரிய இழப்பு, பெரிய நஷ்டமாகும். இதைச் சரி செய்வதற்காகவும் பாவச் செயல்களுக்கு அதிகாரியாகவும் காரணமாகவும் இருக்கிற பிசாசின் தலையை நசுக்கி அழிப்பதற்காகவும் பிதாவாகிய தேவ குமாரனாகிய இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பச் சித்தம் கொண்டார். பிதா தனக்கு நியமித்த பாடு மரணங்களை குமாரனாகிய கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தார்.
ஏசாயா 53:9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்.
வ.12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு…
அப்போஸ்தலர் 2:32 இந்த யேசுவைத் தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
ஏசாயா தீர்க்கத்தரிசி இயேசு அடையப்போகிற சிலுவைப் பாடுகளைப் பிரேதக்குழி என்று சொல்லுகிறார். அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்பதற்கிணங்க ஏசுவுக்கு வலதுபக்கத்தில் ஒரு கள்ளனையும் இடதுபக்கத்தில் ஒரு கள்ளனையும் சிலுவையில் அறைந்தார்கள். இயேசு மரிக்கிறபொழுது, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்றார். மனந்திரும்பிய கள்ளனிடம், “இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்” என்றார். பரதீசு என்பது ஆபிரகாமின் மடியைக் குறிக்கும். ஆபிரகாம் – ஐசுவரியவான் – கானான் தேசத்தின் ராஜா – விசுவாசிகளின் தகப்பன். நாமெல்லாரும் ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கிறோம்.
அப்போஸ்தலர் 2:32 இந்த யேசுவைத் தேவன் எழுப்பினார், இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
சிலுவையில் மரித்த இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைத்தார்கள். மூன்றாம் நாளில் இயேசு உயிரோடு எழுந்தார். உயிர்த்தெழுந்த இயேசு தம்முடைய சீஷர்களுக்கு காட்சி கொடுத்தார். சீஷர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் தரிசனத்தைப் பார்த்தார்கள்.எனவே தான் “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் என்று உறுதியாகக் கூறினார்கள். இவ்விதமாய் குமாரனாகிய கிறிஸ்து மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசின் தலையைச் சிலுவையில் நசுக்கிக் கொன்று முடித்தார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By WeAppU [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.