‘கேரளாவில் அடுத்த 5 நாட்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது’, இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை!
தென்மேற்கு பருவகாற்றினால் இந்த வருடம் (ஜூன் 1 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை) பெய்த மழை கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 2346.6 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராசரியாக 1649.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 42 சதவிகிதம் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 92%, மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் 72% அதிக மழை பெய்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
1. இன்றைய தினம் (ஆகஸ்ட் 19 தேதி காலை), வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு புதிய குறைந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது கேரளாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது.
2. கேரளாவில் (சில இடங்களை தவிர) அடுத்த 5 நாட்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது.
3. கேரளாவின் மாவட்ட வாரியாக மழைப்பொழிவு முன்னறிவிப்புகள் இந்திய வானிலை ஆய்வு துறை இணையதளத்தில் வழங்கப்படுகிறது.