காத்திரு!
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்திரெண்டு பதினொன்றில், என் ஆத்மாவே நீ ஏன் கலங்குகின்றாய்? ஏன் எனக்குள் தேங்குகின்றாய்? தேவனை நோக்கி காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும், என் தேவனுமாய் இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். என் ஆத்மாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தேங்குகிறாய்? தாவீது தன்னுடைய மனதை திடப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நீ எண்ணின காரியம் நடக்கவில்லையோ? நீ எதிர்பார்த்த காரியம் உனக்கு கைகூடவில்லையோ? உறவினர்கள் உன்னை கைவிட்டுவிட்டார்களோ? நீ குறைச்சலடைந்து போனாயோ? பஞ்சம், பட்டினி, கொள்ளை நோய் என்று சொல்லி நீ கலங்கிக்கொண்டு இருக்கிறாயோ? கர்த்தரை நோக்கி பாரு, தேவனை நோக்கி நீ காத்திரு.
வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தர் தம்முடைய மகிமையின் சாயலில் படைத்த மனிதனை கைவிடமாட்டார். அவர்களை அழித்துவிடமாட்டார். அவர்களை இரட்சிப்பதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறார். என் மகன் என் மகள் எப்போது மனந்திரும்புவார்கள் என்று சொல்லி அவர் காத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே சோர்ந்து போகாதே! ஆத்மாவே நீ சோர்ந்து போகாதே, திடனற்று போகாதே என்று சொல்லி நாம் நம்மை தேற்றுவோம். தைரியமாக இக்கிருபையின் முகத்தை நோக்கி பார்ப்போம். ஆண்டவர் நம்முடைய முகத்திற்கு இரட்சிப்பை அருளிச் செய்வார். நம்முடைய துக்கங்களை மாற்றுவார். நம்முடைய கவலைக் கண்ணீரை துடைப்பார். ஆறுதலையும், தேறுதலையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தந்தருளுவார். ஆகவே அவர் எனக்கு நன்மை செய்வார் என்று சொல்லி ஆண்டவரை போற்றி புகழ்ந்து நான் அவரை மகிமைப்படுத்துவேன். என் நாவினால் அவரை துதித்து போற்றி புகழ்ந்து அவரை மகிமைப்படுத்துவேன்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நீர் எங்களை திடப்படுத்தும் படியாக வந்திருக்கிறீர். நீர் எங்களை தேற்றும்படியாக வந்திருக்கிறீர். நீர் எங்களை இரட்சிக்கும்படியாக வந்திருக்கிறீர் கர்த்தாவே! உலகப்பிரகாரமாக ஆண்டவரே நாங்கள் எதிர்பார்த்த காரியங்கள் தடைப்பட்டாலும், நீர் ஏற்ற வேளையிலே எங்களுக்கு வேண்டிய நன்மைகளை கொடுத்து நீர் தைரியப்படுத்துகிறவர். நீர் எங்களை கைவிடமாட்டீர். நான் உங்களை திக்கற்றவர்களாகவிடேன் என்று சொல்லிய கர்த்தர் எங்களோடு கூட இருப்பீராக. கர்த்தாவே! எங்களுடைய ஆவி ஆத்மா சரீரத்தை நீர் பலப்படுத்துவீராக. எங்களை விசுவாசத்திலே பலப்படுத்தும். நம்பிக்கையிலே உறுதிப்படுத்தும். உங்களுடைய முகப்பிரகாசத்தை அருளிச்செய்து எங்களை ஆசிர்வதியும். எங்களை சந்தோஷப்படுத்தும். இந்த ஜெபத்தை ஏறெடுக்கக்கூடிய எந்தவொரு சகோதரனுக்கும், சகோதரிக்கும் உம்முடைய நன்மைகளை கொடுத்தருளி அவர்களை ஆசிர்வதிப்பீராக. ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்